Dec 09, 2022
விமர்சனம்

டியூன் திரைப்பட விமர்சனம்

வார்னர் பிரோஸ் பிக்சர்ஸ் வெளியீட்டில் டெனிஸ் வில்லிநியூவ் இயக்கத்தில் டிமோதீ சலாமெட், ரெபேக்கா ஃபெர்கியூசன், ஆஸ்கர் ஐசாக், ஜோஷ் பிரோலின், ஸ்டெல்லன் ஸ்கார்ஷ்கார்ட், தேவ் பவுதிஸ்தா உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘டியூன்’. இப்படம் 1965ல் வெளியான புகழ்பெற்ற ஃபிரான்க் ஹெர்பெர்ட் எழுதிய நாவல்  ’டியூன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டப் படம். புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அதன் சாராம்சத்தை பெரும்பாலும் கொடுக்கத் தவறிவிடும்.  ஆனால் சமீபத்தில் வெளியான டியூன் அதன் விஷுவல் மற்றும் கதைக்களம் என அத்தனையும் அப்படத்தின் நாவலை வாங்கியே தீரவேண்டும் எனும் எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. ஒரே லைனில் சொல்லிவிடலாம் படத்தின் கதையை 'கிரகங்களுக்கு இடையே நடக்கும் போர்'. ஆனால் இரண்டரை மணிநேரம் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்தில் அமர வைத்து விடுகிறார் இயக்குநர் டெனிஸ் வில்லிநியூவ்.

ஸ்பைஸ் என்னும் ஒரு மூலப்பொருள் கிடைக்கும் பாலைவன கிரகம். இந்த ஸ்பைஸ் மூலப்பொருளைக் கொண்டுதான் கிரகங்களுக்கு கிரகம் பயணம் செய்யமுடியும். எரிபொருளாக மட்டும் இல்லாமல் , அந்த ஸ்பைஸ் மூலம் ஏகப்பட்ட பயன்கள் உயிரினங்களுக்குக் கிடைக்கும். இந்த ஸ்பைஸ்க்காக அட்ரேய்ட்ஸ், மற்றும் அராக்கிஸ் இரு கிரக வாசிகளுக்கு இடையே நடக்கும் போர்தான் டியூன் படக் கதை. இதற்கிடையில் மணல் வோர்ம் எனப்படும் புழு. மணலில் உண்டாகும் அதிர்வலைகளைக் கொண்டு அதன் பாதையில் இருக்கும் அத்தனையையும் விழுங்கிவிடுகிறது. 90டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட பாலைவனம், மனிதர்களின் நீர் சக்தியை உரியும் அதற்கிடையில் போர் மற்றும், புழு என இரு கூட்டமும் அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆள நினைக்கின்றனர். இதன் முதற்கட்ட வெற்றி யாருக்கு என்பதே முதல் பாதி டியூன்.

படம் முடிந்து கிளைமாக்ஸில் இதற்கு அடுத்தப் பாகம் இருப்பதை உறுதி செய்கிறார் இயக்குநர் டெனிஸ். ஹீரோவாக டிமோத்தி சலாமட்.25 வயதான டிமோத்திக்கு படத்தில் டீன் பருவ பால் அட்ரேடிஸ் கேரக்டர். மேலும் அட்ரேடிஸ் கூட்டத்தின் இந்நாள் இளவரசன், மற்றும் எதிர்கால டியூக் அல்லது அரசன். டீன் பருவத்திற்கே ஆன கனவு, மனம் போன போக்கில் செயல்படுதல், ஆனாலும் அந்த இளவரசருக்கான கெத்து என டிமோத்தி கூர்மையான பார்வை, அரசனுக்கே உரிய தோரணை என அந்த வயதில் இத்தனை பக்குவமான நடிப்பு. அம்மாவாக, மகனுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக செயல்படும் மாயக்காரியாக என ரெபெக்கா ஃபெர்கியூசந்தான் அடுத்தப் பாகத்திலும் பயணிக்க போகிறார் என்பதற்கு ஏற்ப நடிப்பில் அசத்துகிறார். எண்ணங்களிலேயே கணவர் இறந்ததை புரிந்து தேம்புவது, ஆனாலும் மகனை பாடாய் படுத்தும் கனவுகளுக்கு தீர்வு தேடுவது என ரெபேக்கா பக்கா. மற்றவர்கள் அனைவருமே கதைப் போக்கில் சென்று தங்களின் பங்கை சிறப்புற கொடுத்துள்ளனர்.

படத்தின் முக்கிய பாத்திரம் விஷுவல் மற்றும் பாலைவனத்தில் அறட்டும் ராட்சத மண் புழுதான். புழுவை முழுமையாகக் காட்டாமல், ஜெல் போன்ற பிசுபிசுப்பு வகையறாக்களென ஏதுமின்றி, அதன் வாயை மட்டும் பெரிய மணல் குகை போல் திறக்கச் செய்து காட்டியதற்கே இயக்குநருக்கு ஹேட்ஸ் ஆஃப். இதற்கு முந்தைய படங்களில் இந்த பாலைவன புழுக்கள் பெரும்பாலும் முகம் சுழிக்கச் செய்யும். அந்த வகையில் ’டியூன்’ பட வோர்ம் மாஸ். கிரேய்க் ஃபிரேசர் ஒளிப்பதிவு மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் பின்னணி இசையில் 3டியில் நம் கண்களுக்கு விஸ்வரூப விருந்து வைக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் அறிவியல் டெக்னாலஜி, விஷுவல், பால்வழி அண்டம், மாஸ் மேக்கிங் என ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் டெனிஸ் இந்தப் படத்தில் கண்ணுக்கெட்டின தூரம் பாலைவனத்தின் பிரம்மாண்டம் , அதில் நடக்கும் யுத்தம் என விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். நிச்சயம் படத்தின் டெக்னிக்கல் மேக்கிங்கிற்காகவே அடுத்த வருட ஆஸ்கர் பட்டியலில் கணிசமான விருதுகளை பெறும் என்பதில் மட்டும் ஐயமில்லை. மொத்தத்தில் ஹாலிவுட் சினிமா ரசிகர்களின் கண்களுக்கும் , மூளைக்கும் விருந்து வைத்து விஷுவல் டிரீட் கொடுக்கிறது டியூன்.