Jan 30, 2023
விமர்சனம்

ரைட்டர் - திரை விமர்சனம்

நீலம் புரடக்‌ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, திலீபன் , சுப்ரமணியம் சிவா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ரைட்டர்’. ’ரைட்டர்’ தங்கராஜ் (சமுத்திரகனி) காவல் துறையினருக்கும் யூனியன் வேண்டும், தங்களது வேலையும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வழக்குப் போட்டு போராடிக் கொண்டிருக்கும் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி. அந்தப் பிரச்சினையின் காரணமாக அவர் வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார்.

அங்கு அவருடைய சீனியாரிட்டிக்கு மரியாதை தராமல் 'பாரா' டூட்டி போட்டுவிடுகிறார்கள். டி.சி. உத்தரவின் பேரில் தேவகுமார் (ஹரி கிருஷ்ணன்) என்னும் பி.ஹெச்.டி படிக்கும் மாணவனை ஒரு மண்டபத்தில் பிடித்து வைத்திருக்கிறார்கள்.  எதற்கு அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்னும் காரணமே தெரியாமல் தங்கராஜ் அங்கு வந்து சேர சூனியம் சூழத் துவங்குகிறது. நக்சல், கிரைம் சீன், நாட்டுத் துப்பாக்கி என டி.சி. மற்றும் அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உட்பட தங்கராஜைக் கொண்டே ஒரு வழக்கு ஜோடிக்கிறார்கள். முடிவு என்ன ஆனது யார் இந்த தேவகுமார், ஏன் பிடித்து வைத்திருக்கிறார்கள், என்பது மீதிக் கதை. ’ரைட்டர்’ தங்கராஜ் கேரக்டரில் சமுத்திரகனி பாத்திரத்தில் அவ்வளவு அழுத்தம். ரெண்டு பொண்டாட்டி, ஒரு மகன், எளிமையான மனிதர்.

அதே சமயம் நேர்மையாக இருக்க நினைத்தாலும் விடாத பணியாளர்கள். அவர்களை சமாளிக்க முடியாமல் அழுதுத் தீர்ப்பது, கண் முன் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கக் கூட முடியாமல் அதிகாரத்திலேயே அதிகாரத்திற்குக் கீழ் இருந்து தவிப்பது என மனிதர் தொப்பையும், தள்ளாட்டமுமாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். தேவகுமாராக வரும் ஹரி கிருஷ்ணன் ஒவ்வொரு கட்டத்திலும் நம் உணர்வுகளை சீண்டிப் பார்க்கிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் சுப்ரமணியம் சிவா தேவகுமாரின் அண்ணனாக நம்மை கண்ணீரிலேயே நனைய வைத்துவிடுகிறார்.

’டேய்! போலீஸ்லயும் நல்லவைய்ங்க இருக்காய்ங்க தம்பி’

என்றதும் ‘இப்போ உசுரோட இருக்காய்ங்களா?’ என ஆங்காங்கே நக்கல்களை வீசி மனதில் நிறைகிறார் ’மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி கேரக்டர். ‘உன் சாதி ஆம்பளைங்களவே நான் குதிரைல ஏற விட மாட்டேன், பொட்டச்சி நீ ஏறுவியா, போ போயி சாணி அள்ளு’. ‘தங்கோராஜ், சுடுங்க தங்கோராஜ், பென்சன் கூடவே விருதும் சேர்த்துக் கிடைக்கும் தங்கோராஜ்’ என ஒரே டி.சி ஒட்டு மொத்த காவல் துறையின் அதிகார முகமாக நின்று நம்மை அரட்டியிருக்கிறார் கவின் ஜெய் பாபு. படம் முழுக்க ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் தொலைந்துப் போனதொரு உணர்வுகளைக் கொடுத்தமைக்கே இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்புக்குப் பாராட்டுகள்.

இதுவரை தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படாத கதைக்களம். காவல் துறையினரால், அவர்களுக்கே நடக்கும் அவலம், மேலும் அதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் என கதை நினைத்துப் பார்க்க முடியாத அரசியல் பேசுகிறது. அங்கேயும் இருக்கும் ஜாதி அடக்குமுறை, அதனால் ஒடுக்கப்படும் கடைநிலை காவல் ஊழியர்கள் என படம் பல பகீர் நிதர்சனங்களை எடுத்து வைத்திருக்கிறது. காவல் நிலையத்தில் காவலர்களுக்கே முதலில் பாதுகாப்பு இல்லையா என்னும் உண்மை நிலை மேலும் நம்மை ஆட்டியிருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் டீ, காபி , டூட்டி பிரித்தல், சீன் வரைதல், என சின்னச் சின்னச் போலீஸ் நிமிடங்கள் கூட கவனமாக பதிவு செய்திருக்கிறார் பிராங்ளின் ஜேக்கப். பிரதீப் கலிராஜா ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தா இசையும் படத்திற்கு மாபெரும் பலமாக காவல் துறையின் சம்பவங்களை கண்முன் காட்சிபடுத்தியிருக்கிறது. 'கானல் நீராய்' பாடல் பாரமான நினைவுகளை தாங்கி கண்களைக் குளமாக்குகிறது.  மொத்தத்தில் காவல் துறைக்குள் நடக்கும் ஜாதி அடக்குமுறை, முறைப்படுத்தப்படாத வேலை, மற்றும் பணியாளர்கள் நிலை, அதிகார துஷ்பிரயோகம் என ’விசாரனை’, ‘ஜெய்பீம்’, படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு காவல் துறை சாந்த சமூகப் பிரச்னையைப் பேசிய படமாக மனதில் நீங்காமல்  நிறைகிறது ‘ரைட்டர்’.