Jan 30, 2023
விமர்சனம்

எப்.ஐ.ஆர். - திரை விமர்சனம்

விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்து அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எப்.ஐ.ஆர். மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் , ரெபா மோனிகா, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. ஐஐடி’யில் படிப்பை முடித்துவிட்டு ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் பைசல் இப்ரஹிம்( விஷ்ணு விஷால்). இலங்கையில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த ஒரு தீவிரவாத குழு இந்தியாவிற்கும் மிரட்டல் விடுக்கிறது.

இந்த சமயத்தில், கம்பெனிக்காக வாங்கிய கெமிக்கலை வெடிகுண்டு செய்வதற்காககத் தான் வாங்கினார் என்று மத்திய போலிசார்  இப்ரஹீமை கைது செய்கின்றனர். சாட்சிகளும் தடயங்களும் அவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்படுகிறார். உண்மையின் பின்னணி என்ன? தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து இப்ரஹீம் மீண்டாரா என்பதே படத்தின் கிளைமாக்ஸ். கல்லூரி கால இளமை, வாழ்க்கையின் மீது வெறுமை, சுமத்தப்பட்ட பழி துரத்த ஓட்டம், என பல விதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

குறிப்பாக உடல், முகம் என அனைத்திலும் ஒரு வலிமை தெரிகிறது. என்.ஐ.ஏ உயர் அதிகாரியாக வரும் கெளதம் மேனன் படத்திற்கு நல்ல தேர்வு. மிடுக்கான நடிப்பில் ஸ்டைலாக நிற்கிறார். ஆச்சர்யமாக ரைசாவுக்கு மிக முக்கிய பாத்திரம். தனக்கு கொடுத்தள்ள கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார். மஞ்சிமா மோகனுக்கும் ரெபா மோனிகாவுக்கும் வந்து போகும் காட்சிகள் தான்.

படத்தில் இத்தனை நாயகிகள் இருந்தும் எங்கேயும் காதல், ரொமான்ஸ் என நேரத்தை வீணாடிக்காமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததற்கு சபாஷ்.  மேக்கிங்கில் தனித்துவத்தை வெளிக்காட்டியதற்காக இயக்குநர் மனு ஆனந்தை பாராட்டலாம். நடந்துகொண்டிருக்கும் மதப் பிரச்னகளுக்கு ஏற்ப இந்தப் படம் ஒரு நல்ல டிரெண்டாக அமைந்திருக்கிறது. அஷ்வத் பின்னணி இசையும் , அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும் படத்துக்குத் தரமான தேர்வு. புல்லட்டுடன் இணைந்த தோட்டா போல் அவ்வளவு சிறப்பு. ஒரு சில லாஜிக்குகள் இடிக்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக பெத்தத் தாய்க்குக் கூட மகன் அப்ஸர் என்பது தெரியாமல் இருப்பது, கெமிக்கல் விற்ற முதலாளியை விட இடையில் டீல் முடித்தரை டார்கெட் செய்வது இப்படி.  க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் படத்திற்கு பெரிய ப்ளஸ்.  மொத்தத்தில் மதமும் மதத்தின் அடையாளமும் ஒரு மனிதனின் குணத்தை தீர்மானிக்காது என அழுத்தமாக சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால் அதை பிரமாதமாக சொல்லிச் சென்று இருக்கும் எஃப். ஐ. ஆர் நிச்சயம் தவிர்க்க முடியாத படம்.