Dec 09, 2022
விமர்சனம்

வலிமை - திரை விமர்சனம்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, இளவரசு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘வலிமை’.  செயின் திருட்டு முதல், போதைப்பொருள், கொலை, கொள்ளை என நகரத்தில் கணக்கே இல்லாமல் குற்றங்கள் நடக்கின்றன. இந்தக் குற்றங்கள் அனைத்தையும் ஒரு கைதேர்ந்த திறமையான பைக் கேங் செய்து வருகிறது. இந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிக்க மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் ஏ.சி.பி அர்ஜுன் குமார் ஐ.பி.எஸ்(அஜித்).

அவருக்கு துணையாக ஆபிசர் சோபியா மற்றும் அவர் குழு (ஹியூமா குரேஸி). யார் இந்த கேங் இவர்களுக்கு தலைவனாக இருக்கும் அந்த உல்ஃபராங்கா (எ) நரேன் (கார்த்திகேயா) யார்? என்பதைக் கண்டுபிடிப்பதே பரபர சேஸிங் ஆக்ஷன் போலீஸ் கதை. ரேஸ், பைக், சேஸிங் என்றாலே அஜித் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் உடன் குஷியாகி விடுகின்றனர். ஆனால் எந்த ஹீரோவுக்கும் இல்லாத துணிச்சலும், வேகமும் அஜித்திடம் இருப்பதுதான் அவரின் சிறப்பு. மனிதர் உயிரைப் பணயம் வைத்து இறங்கி பைக் ஓட்டியிருக்கிறார். ஒரு சில பறக்கும் ஷாட்டுகள் தவிர மற்ற அனைத்துமே அஜித்தான்.

பைக் மட்டுமல்ல பஸ் வரை அவரே ஓட்டிச் சென்று சேஸிங் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். திரையிலும் ஸ்டைல் லுக், மாஸ் என கிளாப்ஸ் அள்ளுகிறார். ஹியூமா குரேஷி போலீஸ் அபீசராக வருகிறார், கன் ஷூட்டிங்கில் கிளாஸாக இருக்கிறார். அவ்வளவுதான் அவருக்கு அதுதான் வேலை என்றாலும் அதைச் சரியாக செய்திருக்கிறார். ஒரு ஆக்ஷன் காட்சியிலும் கூட அருமை. அஜித்திற்கு பிறகு படத்தின் அடுத்த பிளஸ் வில்லன் கார்த்திகேயாதான். சிக்ஸ் பேக், ஆறடி உயரம், கிளாஸ் லுக் என தமிழுக்கு புதிதாக ஒரு யுங் , சார்ம் நடிகர் கிடைத்திருக்கிறார். 'ஆர்.எக்ஸ் 100 ' தெலுங்கு படம் பார்க்காதவர்கள் அனேகமாக இந்தப் படத்திற்கு பின் பார்ப்பார்கள் போலும்.

அந்த அளவிற்கு இவர் யாரென கேள்வி ரெண்டு வருடமாக சுற்றலில் இருக்கிறது. அதற்கேற்ப ஒரு பைக் மேன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். மற்ற நடிகர்கள் அவரவர் வேலையை சரிவர செய்திருந்தாலும் பெரிய வேலைப்பளு இல்லை. அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் ஐயப்பன் சற்று கவனம் ஈர்த்திருக்கிறார். இயக்குநர் வினோத் அவரைத்தான் பல இடங்களில் தேட வேண்டியதாக இருந்தது. அவரின் முந்தைய படங்களில் அவர் கொடுத்த ஆளுமையும், டிடெய்லிங்கும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். படம் நெடுக அதிகமாகவே பைக் சேஸிங் இருப்பது கொஞ்சம் ஓவர் டோஸாகி, ஆங்காங்கே லாஜிக்குகளும் அப்பட்டமாக இடித்து நிற்கின்றன. எனினும் சின்னத் திருட்டு என எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்னும் அலர்ட் மணி அடித்த விதத்திலும், இந்தச் சின்னத் திருட்டுதான் ஏழைகளின் வாழ்வாதாரங்களை பாதிப்பவை என கருத்து சொன்னதற்கும் பாராட்டுகள்.

இரண்டாம் பாதியில் வரும் அம்மா பாடல், சென்டிமென்ட் என அனைத்தும் தேவையில்லா ஆணிகளாக படத்தை திசை திருப்புகின்றன. ரிஸ்கான பைக் சாகசங்கள் அருமையோ அருமை. மேலும் ஆக்ஷன் காட்சிகளும் தமிழுக்கு புதிதாக இருந்தன.படத்திற்கு பெரிய வலிமை கேமராமேன் நிரவ் ஷா. ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். அதற்கு ஏற்ப யுவனின் பின்னணி அருமை. எனினும் பாடல்களில் இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். படத்தில் ஆங்காங்கே தென்படும் குற்றங்கள் குறித்த வாசகங்கள் சிறப்பு. மொத்தத்தில் இரண்டு வருட காத்திருப்புக்கு அஜித் ரசிகர்கள் கொண்டாட படம் நெடுக அஜித்திஸம் நிரம்பியிருக்கிறது. பொதுவான ஆடியன்ஸ் ஒருமுறை பார்க்கலாம்.