Mar 22, 2023
உலகம்

இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு

கொழும்பு: ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார்.

இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன.

அதே ரேநத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள், இந்த தினத்தை கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு மற்றும் கடையடைப்பு செய்தனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது. இதில், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.