Aug 10, 2020
ஆலோசனை

ஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா?!

நன்றி குங்குமம் டாக்டர்

அறிவோம்


இளமையாகவும், அழகாகவும் வலம் வர யாருக்குத்தான் ஆசை இருக்காது?!இதன் காரணமாகவே தலையில் ஓரிரு வெள்ளை முடியைப் பார்த்தாலே பலரும் பதற்றமாகிவிடுகிறார்கள். ஆயுள் முழுவதும் தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

அதனால்தான் எத்தனை வேலை இருந்தாலும் டை அடிப்பதற்கென்றே தனியாக நேரம் ஒதுக்குகிறார்கள். அதிக முயற்சி எடுத்து, தலைமுடியை கருநிறமாக மாற்றி இளமையுடன் வலம் வருகிறார்கள். இது நியாயமான, அடிப்படையான விருப்பமாக இருப்பினும் ஹேர் டை பயன்பாடு சில நேரங்களில் ஆரோக்கியரீதியிலான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

ஹேர் டை பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நல்ல ஹேர் டையினைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஹெர்பல் ஹேர் டை என்பதை நம்பலாமா?
 - சரும நல மருத்துவர் செல்வம் நம் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

‘‘ஹேர் டையின் பக்க விளைவுகள் பல நேரங்களில் உடனேயோ அல்லது குறுகிய காலத்திலோ தெரிந்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் கழித்தும் தெரிய வருவதுண்டு. இதற்கு காரணம், வணிக ரீதியாக விற்கக்கூடிய பல ஹெர்பல் ேஹர் டைக்களிலும் ரசாயனம் கலந்தே விற்கப்படுகிறது என்பதுதான். முடியை கருப்பாக மாற்றக் கூடிய தன்மையை பல ரசாயனப் பொருட்களே தீர்மானிக்கின்றன. உதாரணத்துக்கு Para-phenylenediamine(PPD), Ammonia, Resorcinol, Paraben போன்ற ரசாயனம் சேர்க்கப்படும்போதுதான் முடி கருநிறமாக மாற்றம் பெறுகிறது.

இந்த ரசாயனக் கலவைகளால் சரும அலர்ஜி வரலாம். வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்படலாம். நெற்றியிலும் கன்னத்தின் மேல்பகுதியிலும் கருப்பாக தோற்றமளித்து நாளடைவில் நாளுக்கு நாள் முகமே கருப்பாக மாறுவதும் உண்டு. சிலருக்கு ரசாயனம் கலந்த டை அடித்த அன்றைக்கு இரவோ அல்லது மறுநாள் காலையோ முகம் வீங்கிவிடும். உதடு, தலையில் அரிப்பு எடுக்கும், சொரிந்தால் தண்ணீர் வரும். முகம் விகாரமாகவும் மாறிவிடலாம். இத்தகைய பிரச்னைகளுக்கு சரும நல மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகி விடும்.

ஹேர் டையினால் வருகிற அதிகபட்ச பிரச்னைகள் இந்த அளவுதான். சிலர் அச்சுறுத்துவதுபோல் ஹேர் டையினால் புற்றுநோய் என்கிற அளவுக்கெல்லாம் பயம் வேண்டியதில்லை. ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ரசாயனம் கலந்த ஹேர் டை வகைகளை கவனமுடன் தவிர்த்து, சரியான ஹேர் டையினை வாங்கி பயன்படுத்த வேண்டும். கடைகளில் விற்கிறவர்கள் ‘பின் விளைவுகள் ஏற்படாது’ என்றே வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், பயன்படுத்திய பிறகே பின் விளைவுகள் ஏற்படுவது தெரிந்து ஏமாற்றமடைவோம்.

இதற்கு காரணம் நுகர்வோருக்கு இருக்கும் குறைவான விழிப்புணர்வுதான். விற்பவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ‘ஹெர்பல் ஹேர் டை என்று அச்சிட்டிருந்தது. அதனால்தான் நாங்கள் பயன்படுத்தினோம். இப்படி அலர்ஜி ஆகிவிட்டது’ என்று பலர் சிகிச்சைக்கு வரும்போது கூறுவார்கள். ஆனால், அதில் ரசாயனம் கலந்து இருப்பதால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டிருப்பது சிகிச்ைச மூலமே தெரிய வரும். இதுபோல் ஏமாறாமல் இருக்க Para-phenylenediamine, Ammonia என்று முகப்பு அட்டையில் குறிப்பிட்டு இருந்தால் வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சலூன் கடைகளில் ஹேர் டை அடித்துக் கொள்ளும்போதும் அதுபற்றிய சரியான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும். மருதாணி, செம்பருத்தி, தேயிலைப்பொடி போன்ற இலைகளை அரைத்து இயற்கையாக ஹேர் டை பயன்படுத்தும்போது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நம்பத்தகுந்த இடங்களில் அல்ல நம்பத்தகுந்த பிராண்டுகள் இதுபோல் தெரிய வந்தாலும் பயன்படுத்தலாம். மருதாணி இலையை அரைத்து நேரடியாகவும் தலை முடியில் தடவலாம். இதில் சமீபகாலமாக இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. பல வகையான ஹேர் டைக்கள் இன்று சந்தையில் விற்கப்படுகிறது.

குறிப்பாக, பல வண்ணங்களில் ஹேர் டையினை ஃபேஷனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதுபோல் கலர் ஹேர் டையினைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அந்த ரசாயனங்களால் நிச்சயம் பிரச்னை உண்டாகும். எனவே, கலர் ஹேர் டை பயன்பாட்டை இளம் தலைமுறையினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதேபோல் பள்ளிப்பருவத்திலேயே முடி நரைப்பதையும் தற்காலத்தில் அதிகம் பார்க்கிறோம். இத்தகைய மாணவர்கள் தலை நரைத்ததற்காக தாழ்வு மனப்பான்மை அடைய வேண்டியதில்லை. உரிய முறையில் இயற்கையான ஹேர் டையினைப் பயன்படுத்தலாம்.

சரியான ஹேர் டையினைத் தேர்ந்தெடுக்க இன்னும் ஒரு சிறப்பான வழியும் உண்டு. உங்கள் உடல் தன்மையை அறிந்து தகுதி வாய்ந்த சரும நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். ஏனெனில், ஹேர் டை பயன்பாடு என்பது ஒரு நாளுடன் முடிவதல்ல. நீண்ட நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படப் போவது என்பதால் சரியான தேர்வு முக்கியம்!''

- அ.வின்சென்ட்